சினிமா ஒரு கலை என்பதைத் தாண்டி அது மாபெரும் வணிகம் என எல்லோருக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. இன்று மேலோட்டமான கதையை வைத்துக்கொண்டே வணிகச் சேர்க்கைக்காக சிலவற்றைத் தூவி பல நூறு கோடிகளை அள்ளிவிட முடிகிறது.
மிகச்சிலரே கதையிலும் உருவாக்கத்திலும் சவால்களை எடுத்துக்கொண்டு பிரம்மாண்டமாகவும் அதே நேரம் விஷயம் உள்ள படமாகவும் மாற்றுகின்றனர்.
அப்படி, தெலுங்கு சினிமா இயக்குநர்களில் சிலர் பெரிய உயரங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலிதான்.
பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அவதாரத்தை எடுத்தார். அந்த அலை ஓயும்போது ’ஆர்ஆர்ஆர்’ என்கிற மற்றொரு பிரம்மாண்ட படத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார். பாகுபலி 1, 2 மற்றும் ஆர்ஆர்ஆர் இம்மூன்று திரைப்படங்களும் வசூலித்த தொகை கிட்டதட்ட ரூ. 3,500 கோடி என்கின்றனர்.
தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து உலகளவில் அறியப்பட்ட இயக்குநராகவும் எஸ். எஸ். ராஜமௌலி வளர்ந்திருக்கிறார்.
அவருக்குப் பின் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா, அனிமல் படத்தால் மிகப்பெரிய இடத்தைப் பெற்றார். பெண்களுக்கு எதிரான, வன்முறை மிக்க படம் என்கிற விமர்சனங்கள் கிடைத்தாலும் தந்தை – மகனுக்கு இடையேயான உணர்வுகளைக் ஆழமாகப் பேசியிருந்ததை பலரும் கடந்து சென்றுவிட்டனர்.
அனிமல் திரைப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் சந்தீப் ரெட்டியின் சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை சாதாரணமானது அல்ல என்பதே பல விமர்சகர்களின் எண்ணமாகக் கூட இருக்கிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 800 கோடி வரை வசூலித்து சந்தீப் ரெட்டி வங்காவின் திரை எழுத்தை ரசிக்க வைத்தது. அடுத்ததாக, பான் இந்தியா சினிமாவைக் கடந்து பான் ஆசியா படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஸ்பிரிட் (sprit) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பிரபல கொரிய நடிகர் மா டாங் சியோக் (ma dong seok) நடிக்கின்றனர். இப்போதே படத்திற்கான வணிகங்கள் உச்ச விலைக்குப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்.
இந்த இரண்டு தெலுங்கு இயக்குநர்களைத் தொடர்ந்து இந்த பிரம்மாண்ட பட்டியலில் இணைந்திருக்கிறார் ’புஷ்பா’ இயக்குநர் சுகுமார். புஷ்பாவில் கிடைத்த வெற்றியே அவருக்கு பெரிய புகழைக் கொடுத்தாலும் இன்று வெளியாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் சுகுமாரை இந்தியாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் சேர்த்துவிடும்.
இதுவரை, எந்த இந்திய சினிமாவுக்கும் கிடைக்காத முதல் நாள் வரவேற்பு புஷ்பா- 2 படத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் ரூ. 1000 கோடியை வசூலிக்கும் என்றே தெரிகிறது. இவர்களுடன் தெலுங்கு இயக்குநரான நாக் அஸ்வின் கல்கி படத்தில் விஎஃப்எக்ஸில் பெரிதாக பாய்ச்சலைக் கொடுத்ததுடன் ரூ. 1,000 கோடிகளை வசூலிக்கவும் வைத்தார்.
இப்படி, ஒரே மொழியிலிருந்து நான்கு இயக்குநர்கள் ஆயிரம் கோடி வணிகத்தை நெருங்கியுள்ளது இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை. தெலுங்கு சினிமா இயக்குநர்கள் பிரம்மாண்டத்துடன் வியப்பில் ஆழ்த்தும் வணிகத்தையும் அடைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது!