Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு - ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாகும். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் நடைபெறுகிறது.

இந்தநிலையில் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம், 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், சரியாக 1.39 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார். அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரிந்தது.இதைப்பார்த்த விமானநிலைய ஊழியர்கள், விமான போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

உடனடியாக விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீப்பிழம்பு வந்த திசை நோக்கி விரைந்தனர்.அந்த விமானம், விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறி இருந்தது பின்னர் தெரியவந்தது.

விமானத்தின் வால் பகுதி, அந்த பகுதியில் இருந்த குடியிருப்பு கட்டிடத்தில் புகுந்த நிலையில் இருந்தது. மற்ற பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம் விழுந்து கிடந்த பகுதியை நெருங்குவதற்கே மீட்பு படையினர் மிகுந்த சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்படுத்தினர். விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டன.

பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர்தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பயணிகளில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டவர்கள், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் 1 கனடா நாட்டவர் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தில், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானியும் பயணித்தார். அவரும் இந்த விபத்தில் சிக்கி பலியானார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். விபத்து குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேலுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதேபோல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானப் போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோரும் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தங்களது உறவினர்களை இழந்தவர்கள், ஆமதாபாத்தில் உள்ள விமான நிலையத்துக்கும், அங்குள்ள மருத்துவமனைக்கும் கண்ணீருடன், பதறி அடித்து ஓடிவந்தனர். கதறிதுடித்தவர்களை அருகில் இருந்தவர்கள் தேற்றினர். இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments