வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது.
அதன் பின்னர் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வவுனியா மாநகர சபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர், பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சினை. சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக்கொள்வோம்.
அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்கக்கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே, வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
அத்துடன், இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சி மன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடர வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இணக்கப்பாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.