அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தனது மந்திரிசபையில் இடம்பெறும் மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்யப் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி ஆவார். ‘அமெரிக்காவிற்கு முன்னுரிமை’ என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர், ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது எப்.பி.ஐ. அதிகாரியாக இருக்கும் கிறிஸ்டோபர் ரே, கடந்த 2017-ம் ஆண்டு டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். ஆனால் ஜோ பைடனின் ஆட்சியில், தன் மீதான வழக்குகளை எப்.பி.ஐ. கையாண்ட விதம் குறித்தும், அதன் இயக்குநர் கிறிஸ்டோபர் ரே மீதும் கடுமையான விமர்சனங்களை டிரம்ப் முன்வைத்தார். இந்த நிலையில், 44 வயதான காஷ்யப் பட்டேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது, கிறிஸ்டோபர் ரே மீதான டிரம்ப்பின் அதிருப்தியை காட்டுவதாக உள்ளது என அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.