தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது நாளை காலைக்குள் புயலாக உருவெடுக்க உள்ளது. இந்த புயலுக்கு ‘பெங்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் அந்நாட்டில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நாட்டில் கனமழை, வெள்ள பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 8 பேர் அம்பாறை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ராணுவத்தினரை அனுப்ப அதிபர் திசநாயக உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அதிக கனமழையை ஏற்படுத்தும் அமைப்பு) காரணமாக இந்த சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது கிழக்கு மாகாணத்தை அதிகம் பாதித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.