இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப்பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ‘ஓரிரவு கொள்கை வீதம்’ என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப்பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத்தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் சார்ந்த தரவுகளும் வெளியிடப்பட்டன.
‘ஓரிரவு கொள்கை வீதம்’ அறிமுகம்
இலங்கை மத்திய வங்கியானது நேற்று (27) முதல் நடைமுறைக்குவரும் வகையில், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டுவந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்கு நகர்ந்துள்ளது.
‘ஓரிரவு கொள்கை வீதம்’ எனும் பெயரால் அழைக்கப்படும் இவ்வீதமே இனிவருங்காலங்களில் மத்திய வங்கியின் நாணயக்கொள்கை நிலைப்பாடுகள் குறித்து சமிக்ஞை செய்வதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான நாணயக்கொள்கைக் கருவியாகத் தொழிற்படும்.
அதற்கமைய நாணயச்சபையினால் ஓரிரவு கொள்கை வீதமானது 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை 2 சதவீதமாகப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த துணைநில் வைப்பு வசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்களாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது.
இருப்பினும் மத்திய வங்கியுடனான ஓரிரவு கொடுக்கல், வாங்கல்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இக்கொள்கை வட்டிவீதங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோன்று ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு மேலதிகமாக, நாணயக்கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கும் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
இப்புதிய கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏனைய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் கொள்கை வீதங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து, அவற்றினூடாகக் கிட்டிய பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்க எதிர்பார்க்கை
இது இவ்வாறிருக்க கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் மதிப்பிடப்படும் முதன்மைப்பணவீக்கமானது கடந்த செப்டெம்பர் மாதத்தைப்போன்று ஒக்டோபரிலும் தொடர்ந்து எதிர்மறைப்பெறுமதியில் காணப்பட்டதாகவும், மின்சாரக்கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இதற்குப் பிரதான காரணமாக அமைந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இப்பணச்சுருக்கமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாக மாற்றமடைந்து, நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.
வருமான உட்பாய்ச்சல்
அடுத்ததாக கடந்த காலங்களில் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெறப்பட்ட வருமானமானது, நாட்டின் வெளியக நடைமுறைக்கணக்கு மீதியின் நேர்மறை மாற்றத்துக்குப் பங்களிப்புச்செய்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி – ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 4.9 பில்லியன் டொலர்களாகப் பதிவான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 5.4 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
அதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி – ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 1.6 பில்லியன் டொலர்களாகப் பதிவான சுற்றுலாத்துறை மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி
அதேவேளை கடந்த ஜனவரி – ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதிகள் 10.7 பில்லியன் டொலர்களாகவும், மொத்த இறக்குமதிகள் 15.4 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை முன்னேற்றமடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.