ரணில் விக்ரமசிங்கவும் நல்லாட்சி அரசாங்கத்தில் மகாவலி அதிகாரசபையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்திருந்தார். தற்போது அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நாங்கள் முற்றாக எதிர்ப்போம் என விவசாய போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வத்துஹேவா தெரிவித்தார்.
அரச நிறுவனங்களை மூடிவிடவோ அல்லது தனியார் மயமாக்கவோ அரசாங்கம் எடுத்துவரும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய போராட்ட அமைப்பு வெள்ளிக்கிழமை (28) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு சொந்தமான 166 வணிகம் சாராத நிறுவனங்கள் தொடர்பான மீளாய்வு அறிக்கை ஒன்று கடந்த 17ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் விவசாயத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உள்ளன. மகாவலி அதிகாரசபை, முந்திரி கூட்டுத்தாபனம், நெல் சந்தை சபை போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
அரசாங்கம் தற்போது தங்களது அரசியல் தொடர்பான கொள்கையையே வெளிப்படுத்தி வருகிறது என்பது எங்களுக்கு புரிகிறது. கடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது, அந்த காலத்தில் இந்த நிறுவனங்களை முன்னெடுத்துச்செல்ல முடியுமான தனியார் நிறுவனங்கள் இல்லாமல் இருந்தமையால் அரசாங்கம் தலையிட்டு இதனை முன்னெடுத்துச்செல்ல வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அப்படியானால் தற்போது இந்த துறைகளில் தனியார் துறையினருக்கு இடமளிக்கவே அரசாங்கம் எண்ணி இருக்கிறது. அதன் முதற் கட்டமாகவே கடந்த 17 ஆம் திகதி மீளாய்வு அறிக்கை ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் பிரகாரம் அரசாங்கம் சில நிறுவனங்களை முற்றாக மூடிவிடவும் சில நிறுவனங்களை அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் வழங்கவும் மேலும் சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவுமே எதிர்பார்க்கிறது.
மீளாய்வு அறிக்கையில் மகாவலி அதிகாரசபை தொடர்பில் முன்வைத்திருக்கும் பரிந்துரை தான், அது முற்றாக கலைக்கப்பட வேண்டும் என்பதாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டுவந்ததை நாம் நினைவுகூருகின்றோம்.
மகாவலி அதிகார சபையில் சுமார் 3800 பணியாளர்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை குறைத்து சில பகுதிகளை தனியாருக்கு ஒதுக்கவே ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார். தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு அப்பால் சென்று மகாவலி நிறுவனத்தை முற்றாக மூடிவிடவே முயற்சித்து வருகிறது. இந்த தீர்மானத்தால் மகாவலி யோசனை திட்டத்துக்கு சொந்தமான 210105 விவசாய குடும்பங்கள் இடம்பெயர இருக்கின்றன.
அத்துடன் இந்த ஆய்வு அறிக்கையில் நெல் சந்தைப்படுத்தல் சபையை தனியாரிடம் ஒப்படைத்தல். முந்திரி கூட்டுத்தாபனத்தை கலைத்தல் மற்றும் அதன் நிலத்தை விற்பனை செய்தல். அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனத்தை முழுமையாக மூடுவது போன்ற பல முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றார்.