பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன. அதற்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு உறுதியான அமைப்பாக கிழக்கு மாகாண அரசியல் சமூக பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பமாக மிளிர வேண்டும் என்று ஒரு நல்ல சிந்தனையோடு நாங்கள் கூடியிருக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றி என்பது உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதற்கான வெற்றியாகும். உள்ளூர் அதிகார சபைக்காக போட்டியிடுபவர்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது.
கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் இந்த மண்ணிலே சுமார் 40,000 ஏக்கரை பரிபாலனம் செய்வதற்காக கேட்கின்றார்.
ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 70,000 ஏக்கரை நிர்வகிக்க வேண்டும் எனக் கேட்கின்றார். இவ்வாறுதான் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன.
அதிகம் பேர் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், கருணா அம்மானும் மீண்டும் சேர முடியாது எனக் கேட்டார்கள். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். அது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது.
காலம் தாழ்த்திய முடிவாக இருந்தாலும் சாலப் பொருத்தமான முடிவு எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். அதற்காக உழைத்தவர்தான் முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்.
கருணா அம்மானை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்திருப்பதானது எம்முடைய தோல்வி அல்ல, அது இந்த அரசாங்கத்தினுடைய இராஜதந்திர தோல்வியாகத்தான் என்னால் பார்க்க முடியும்.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை மாற்ற வேண்டிய, கிழக்கு மாகாண மக்களை தூக்கி நிறுத்தவேண்டிய விடயங்கள் எல்லாம் எங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களாக உள்ளன.
கருணா அம்மானோ அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டவர்கள் யார்?
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக்கொள்ளுங்கள்.
விடப்பட்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும்தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவர் ஆக்கியது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலையை எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்தது என்றார்.