பட்டலந்த அறிக்கை பற்றி பேசுபவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின; இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர்; அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றங்களில் சிறப்பாக செயற்பட்டால் அதன் பின்னர் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களுக்கு பின்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான வெற்றியை பெற முடியும்.
முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் கடந்த 7 வருடங்களாக வேலை கிடைக்காமையால் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றுகிறார்கள். பிரதேச சபைகள் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கு ஏற்பட்ட சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும்.
கட்சியை பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம். அத்துடன் மக்களுக்கு சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக தியாகங்களை செய்த தாய் கட்சி ஆகிய தமிழ் அரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம்.
வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு நீர் வரவில்லை. ஆனால் மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் திட்டமிட்ட இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
அதேபோன்று, செட்டிக்குளம் பிரதேசத்தின் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்கு செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் உள்ளன. இதனை கடந்த கால அரசாங்கங்கள் செய்தன. தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கிறது.
வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கூற, ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கமும் தயாரில்லை. அண்மையில் 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் இருந்த பலரில் 4 பேரை பிரித்தானியா தடை செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தினர் அந்த ஒருதலைப்பட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள். பட்டலந்த அறிக்கை பற்றி பேசும் அவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின. இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை.
கடந்த கால அரசாங்கங்கள் என்ன பதிலை சொன்னார்களோ அதே பதிலை தான் இவர்களும் சொல்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக மாயாஜாலம் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாக செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.