அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில், கனடா மீது வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டும் விவகாரம் தொடர்பில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போதைப்பொருட்களையும், புலம்பெயர்ந்தோரையும் கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் கட்டுப்படுத்தும்வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அதன் தொடர்ச்சியாகவே, கனடா பிரதமர் ட்ரூடோ கனடா மாகாணங்களின் பிரீமியர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.