ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக சர்வதேச மாநாடுகளை புறக்கணிப்பதன் ஒரு விளைவாகவே பாதுகாப்பு படையினருக்கெதிரான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை தட்டடிக்கழித்து, இப்போது அதிருப்தி வெளியிடுவதால் பயன் இல்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமக்கு தெரியாத விடயங்களை தெரியவில்லை எனக் கூறுவதற்கு பதிலாக, பொறுத்தமற்ற கருத்துக்களைக் கூறி அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு இழுக்கினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையிலேயே அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது பாதுகாப்பு படையினர் மீது சர்வதேசத்தின் மத்தியில் நன்மதிப்பு காணப்படுகிறது. ஆனால், அதனை கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமானப்படையினரின் தவறே விபத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். தாம் அரசாங்கத்திலிருக்கின்றோம் என்பதை மறந்து எதிர்க்கட்சி அரசியலிலேயே இவர்கள் இன்றும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, விமானப்படையினர் தொடர்பில் தான் தெரிவித்த கருத்து தவறானது என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதியின் செயல்திறன் குறைவாகக் காணப்பட்டாலும் அவரது செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றன எனக் காண்பிப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது. பிரித்தானியா விதித்துள்ள தடை ஒருதலை பட்சமானது என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை தட்டடிக்கழித்து, இப்போது அதிருப்தி வெளியிடுவதால் பயன் இல்லை. எனவே, இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டியேற்படும். பிரிக்ஸ் போன்ற மாநாடுகளுக்கு இவர்கள் சமூகமளித்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது இலகுவாக அந்த நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடியிருக்க முடியும்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தாம் வெளிநாட்டு பயணங்களைத் தவிர்த்து செலவுகளைக் கட்டுப்படுத்தியிருப்பதாகக் காண்பிப்பதற்காக இவ்வாறான மாநாடுகளை புறக்கணிக்கின்றனர். இவற்றின் விளைவாகவே எம்முடன் கலந்தாலோசிக்காது தடைகள் விதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் அனுபவமற்ற தன்மையின் வெளிப்பாடுகளே இவையாகும். இதனை விட இன்னும் பல விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டியேற்படும் என்றார்.