பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் கொஸ்தாப்பல் நேற்று புதன்கிழமை (26) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே திருமணம் செய்த இந்த பொலிஸ் கொஸ்தாப்பல் பொத்துவில் பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் முகநூலில் பதிவேற்றியிருந்தார்.
இக்குற்றத்துக்காக பொத்துவில் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த, மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கொஸ்தாப்பல் ஒருவரை கைது செய்தனர்.
கைதானவர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து இப்பொலிஸ் கொஸ்தாப்பலை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜனவரி தொடக்கம் இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கமீறல் குற்றங்களுக்காக மூன்று பொலிஸார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.