வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ‘சமிலிட்டா சனாதனி ஜோட்’ என்ற இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது கடந்த மாதம் 30-ந்தேதி வங்காளதேசத்தில் உள்ள சத்தோகிரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு நடந்த இந்து மத ஊர்வலத்தின்போது வங்காளதேச கொடி அவமதிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சத்தோகிரம் கோர்ட்டில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோர்ட்டு வளாகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்து மத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.