புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்தவகையில், மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மன்னரும் ராணியும் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. அப்போதே இந்திய பிரதமர் மோடியும் மன்னர் மற்றும் ராணிக்கு இந்தியாவில் விருந்தளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மன்னர் சார்லஸ் – ராணி கமிலா ஆகியோர் அரசு முறை பயணமாக விரைவில் மீண்டும் இந்தியா வருவதாக அந்த நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின்போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான அந்த ஊடக செய்தியில், “மன்னர் மற்றும் ராணியின் இந்திய துணைக்கண்ட சுற்றுப்பயண திட்டம் தயாராக உள்ளது. இது உலக அரங்கில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மன்னர் மற்றும் ராணிக்கு இது போன்ற திட்டங்களை உருவாக்க முடிவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இது அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.