தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ‘சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய “கைதி, விக்ரம், லியோ” போன்ற படங்கள் எல்சியு – வின் கீழ் அடங்கும். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படமும் எல்.சி.யு வில் இணைந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், சவுபின் சாஹிர், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கூலி படம் எல்சியு-வின் கீழ் வராது என்று லோகேஷ் கனகராஜ் முன்பே தெரிவித்திருந்தநிலையில், ‘கூலி’ படம் எல்.சி.யு வில் இணைந்ததா? என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் ஆகியோருடன் கைதி பட நடிகர் நரேன் இருக்கும்படியான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தனது மனதை மாற்றிக்கொண்டு ‘கூலி’ படத்தை ‘எல்சியு’வில் இணைக்கும் திட்டத்தில் உள்ளாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியாதநிலையில், அவ்வாறு இணைந்தால் இப்படம் பிரமாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.