அல்பர்ட்டா மாகாணத்தில் ‘ஸ்னோஷூ’ (snowshoe) வகை காட்டு முயல்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘ரபிட் ஹெமராஜிக்’ (rabbit hemorrhagic) வைரஸ் நோய் பரவி வருவதை மாகாண அரசு கண்காணித்து வருகிறது.
அதிகம் தொற்றக்கூடிய இந்த வைரஸ் நோய், பாதிக்கப்படும் முயல்களில் கிட்டத்தட்ட 90 சதவீதமானவற்றை உயிரிழக்கச் செய்கிறது. ஏராளமான ‘ஸ்னோஷூ’ முயல்கள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அல்பர்ட்டா அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி வடக்கு அல்பர்ட்டா பகுதியில் இலையுதிர் காலத்தில் வேட்டையாடுபவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பூர்வீகக் குடிகளிடமிருந்து இதேபோன்ற இறப்பு தொடர்பான தகவல்கள் அதிகளவில் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் அல்பர்ட்டாவில் வளர்ப்பு மற்றும் காட்டு முயல்களிடையே இந்நோய் கண்டறியப்பட்ட போதிலும், இயற்கையான காட்டு முயல்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பரவல் முன்னெப்போதும் இல்லாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முயல்களை முதன்மை உணவாகக் கொள்ளும் வேட்டை விலங்குகளிடையே, முயல்களின் எண்ணிக்கை குறைந்தால் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்த வைரஸ் மனிதர்களையோ அல்லது மற்ற விலங்குகளையோ பாதிப்பதாக எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு முயல்கள் வைத்திருப்போர் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


