நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் ஆள்நடமாட்டமற்ற குகையிலிருந்து இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் அவரது குழந்தையின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்விரு பிள்ளைகளினதும் உடல் மற்றும் உள நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அரசாங்கத் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நக்கிள்ஸ் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் குழந்தையைப் பிரசவித்த 15 வயதுச் சிறுமி, தனது பச்சிளம் குழந்தையுடன் மீட்கப்பட்ட சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறுமியும் குழந்தையும் தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளமை ஆறுதலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தனிப்பட்ட ஒரு நிகழ்வாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல்வேறு வழிகளில் சிறுவர்களைப் பாதித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவும் வெளிப்படையான கலந்துரையாடலும் பலவீனமடைந்து வருவது இத்தகைய சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பிள்ளைகள் தமது பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையிலான குடும்பச் சூழலை உருவாக்குவதுடன், குடும்பங்களுக்குள் திறந்த கலந்துரையாடல்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களுக்கான நிலையான தீர்வை வழங்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் புதிய மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை (Alternative Care Policy) அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த குறித்த 15 வயதுச் சிறுமி, இரண்டு மாதக் குழந்தையுடன் மீமுரே பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் அமைந்திருந்த குகையிலிருந்து உடுதும்பர பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, அப்பகுதியிலுள்ள கடையொன்றில் இளைஞர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை அவதானித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவிலுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் தாள்களால் மறைக்கப்பட்ட குகையைக் கண்டறிந்துள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காணாமல் போயிருந்த சிறுமியும் அவரது குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி எவ்வித மருத்துவ உதவியுமின்றி குகைக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்திருந்ததுடன், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்குக் கித்துல் தொழிலில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியும் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


