Friday, October 30, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சீமானுக்கு ஆதரவா? தேர்தல் திகதி அறிவிக்கட்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

சீமானுக்கு ஆதரவா? தேர்தல் திகதி அறிவிக்கட்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவளிப்பது தொடர்பில், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மேலும், குறித்த தேர்தல்களில் ஏனைய கட்சிகள் தமது கட்சிக்கு ஆதரவளித்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவளிப்பீர்களா எனக் கேட்கப்பட்டபோது, “முதலில் தேர்தல் திகதி அறிவிக்கட்டும். அதன்பிறகு அதுபற்றி முடிவெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐந்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments