செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய AI மொடலான Gemini 4 Carbon ஐ பஅறிமுகப்படுத்தியுள்ளது.
OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களுடனான போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், குறியீட்டு உருவாக்கம் (Coding) மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட இந்த மொடலை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், Gemini 4 Argon என்ற AI மொடலை கூகுள் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது, மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான Gemini AI மொடல்களின் வரிசையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக Gemini 4 Carbon அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்பு தொடர்பான பணிகளில், குறிப்பாக மென்பொருள் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிதல், அவற்றைப் பயன்படுத்திச் சோதித்தல் மற்றும் பாதுகாப்புத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் இந்த மொடல் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் உள்நிலைச் சோதனைகளின்படி, Gemini 4 Argon மொடலுடன் ஒப்பிடுகையில், Gemini 4 Carbon பாதுகாப்பான குறியீடுகளை உருவாக்குவதில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான பொறியியல் பணிகள் மற்றும் நீண்டகாலம் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய குறியீட்டு உருவாக்கப் பணிகளைக் கையாளும் வகையில் இந்த AI மொடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.


