கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்குக் கடற்கரையில் நடைமுறையில் உள்ள எண்ணெய் கப்பல் தடையை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ், பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் வடக்குக் கடற்கரையில் பெரிய எண்ணெய் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை நீக்குவதற்கான கன்சர்வேடிவ் கட்சியின் தனிநபர் உறுப்பினர் சட்டமூலம், இந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தடையானது கனடாவின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்துவதாகவும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தடையை நீக்குவதன் மூலம் கனடா தனது எண்ணெய் வளங்களை ஆசியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக வருமானத்தைப் பெற முடியும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
கல்கரியைத் தளமாகக் கொண்ட Strathcona Resources நிறுவனம், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரின்ஸ் ரூபர்ட் ஊடாக நாளொன்றுக்கு 250,000 பீப்பாய்கள் வரையான கனேடிய எண்ணெயை ரயில் பாதைகள் மூலம் கொண்டு சென்று பசிபிக் பெருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு தற்போதைய எண்ணெய்க் கப்பல் தடையை நீக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கனடாவின் வடக்குக் கடற்கரைச் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதற்காக இந்தத் தடை அவசியம் என சுற்றுச்சூழல் அமைப்புகளும் பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றனர். எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் மீன்வளம், கடல் உயிரினங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கனேடியப் பிரதமர் மார்க் கார்னியும் அப்போதைய பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபியும் கடந்த ஜூலை மாதம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வடக்குக் கடற்கரைக்கான எண்ணெய்க் கப்பல் தடையை மாற்றமின்றிப் பேணுவதற்கான உறுதிப்பாடு இடம்பெற்றிருந்தது.
இந்தப் பின்னணியில், தடையை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கன்சர்வேடிவ் கட்சியின் கோரிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளைப் பல்வகைப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், கனடாவின் எண்ணெய் ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


