கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் பிக்குகளால் அமைக்கப்பட்டிருந்த கொடிகள் மற்றும் பதாகைகளையும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் அகற்றுவதற்கு முற்பட்டதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளிடம் சென்ற விஹாரமகாதேவி பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அங்குள்ள கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு அல்லது அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த கொடிகள் மற்றும் பதாகைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதற்குச் சத்யாகிரக இடத்தில் இருந்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே இந்தத் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அங்கிருந்த பதாகைகளை பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த இடத்தில் இருந்த பிக்குகளும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


