சம்மாந்துறையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆண் யானை ஒன்று கண்டறியப்பட்டது.
சுமார் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட அந்த யானையைக் காப்பாற்றுவதற்காக, அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியாக அவசர மற்றும் தீவிர மருத்துவச் சிகிச்சைகளை வழங்கி வந்தனர்.
இருப்பினும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று (24) அந்த யானை உயிரிழந்துள்ளது.
இறந்த யானையின் உடற்கூற்றுப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


