சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் பயன்படுத்தும்போது சிதைந்து கிழிவதாக நுகர்வோரிடமிருந்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து விசாரணைகளும் சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.
இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தளத் தகவல்கள் குறிப்பிடப்படாமல், பணிப்புரை இலக்கம் 85ஐ மீறி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயப்பர்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் 05 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களில், பல்வேறு அளவுகளிலான குழந்தைகளுக்கான டயப்பர்கள் மற்றும் Baby Pants பொதிகள் 81 மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு டயப்பர் பொதிகள் 06 உள்ளடங்கியிருந்தன. இதன்படி குறிப்பிடப்பட்ட வழக்குப் பொருட்களில் குறைந்தது 87 பொதிகள் அடங்கியிருந்தன.
சம்பந்தப்பட்ட வழக்குகள் நேற்று(16) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் (இலக்கம் 05) முன் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுகள் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறித்த 5 வர்த்தக நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்படி, 05 வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட மொத்த அபராதம் ரூ.140,000/- ஆகும். மேலும், வழக்குப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முழு டயப்பர் தொகுதியையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
டயப்பர்கள் போன்ற சுகாதாரப் பொருட்களை வாங்கும் போது, பொதியில் உள்ள இறக்குமதியாளர் விபரங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட லேபிள் தகவல்களை கவனமாகச் சரிபார்பதுடன் பயன்படுத்தும்போது அசாதாரணமாக சிதைதல், கிழிதல் அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், இயன்றவரை பொதியையும் பற்றுச்சீட்டையும் பாதுகாத்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகளை 1977 குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


