இந்தியா முழுவதும் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று புதுச்சேரியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தவெக ஆதரவு கோரி காங்கிரஸ்
இந்நிலையில், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திடம் இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து ஆதரவு கோரும் கடிதத்தை கையளித்துள்ளனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விநாயகம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்றிருந்த இந்த தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி தவெக ஆதரவை கோரியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


