Monday, September 14, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்

ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தி, அதன் அபாயங்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உலகளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில், “தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்ற தலைப்பில் டாரியோ அமோடி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பல முக்கிய நோய்களுக்கு தீர்வு காணவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், மனிதகுலத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்கவும் செய்யறிவால் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், செயற்கை நுண்ணறிவு மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக இருப்பதால், அதன் தவறான பயன்பாடு மற்றும் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் தீவிரமானதாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள், உயிரி பயங்கரவாதம் மற்றும் கடுமையான பொருளாதார சீர்குலைவு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், செயற்கை நுண்ணறிவு மொடல்களின் திறன்களை மேம்படுத்தும் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக டாரியோ அமோடி தெரிவித்துள்ளார். வேகத்தை விட எச்சரிக்கையையும், லாபத்தை விட விவேகத்தையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டாரியோ அமோடியின் கருத்துக்கு ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆதரவு தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், சுயாதீன மதிப்பீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் அமைப்புகளை அணுகும் வசதியை வழங்கும் நடவடிக்கையை ஓபன் ஏ.ஐயும் பின்பற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டாரியோ அமோடியின் கருத்து சரியானது என எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவும், செய்யறிவின் வளர்ச்சி மனிதகுலத்துக்கு பயனளிக்கும் வகையிலும் மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்த விவாதம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments