ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை கடந்த புதன்கிழமை (02) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி ஈரானுக்கு வருவாய் ஈட்ட உதவும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளைப் பேணிவரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நிலைமை சவாலாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய மோதல் தற்போது ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


