போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கையில் மேலதிக விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரு முக்கிய சந்தேகநபர்கள் அபுதாபியிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அபுதாபியில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள், இன்று (03) காலை 10.15 மணியளவில் எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான EY-392 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்தமை தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் அசோகபுர துன்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான பந்துல திசாநாயக்க, மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேகநபரான 36 வயதுடைய ஹர்ஷ குமார, ‘பரேவி சுதா’வின் நெருங்கியவராகவும், பூஸா சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரச் சம்பவத்துடன் தொடர்புடையவராகவும் தெரிவிக்கப்படுகிறார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார கொழும்பு தெற்குப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


