கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை (28) பகல் நேரத்தில் குறித்த பகுதிகளில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும்.
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு வெப்பக் குறியீடு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை பிரதிபலிப்பதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும், தொடர்ச்சியான கடுமையான செயற்பாடுகள் வெப்பத்தால் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் போதிய அளவு நீரை அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்


