நந்தா மாலினி தான் அணிந்திருந்த வெண்மை நிற ஆடையைப் போலவே, உறுதியான கொள்கையுடனும் குறுகிய நோக்கங்களால் கறைபடாமலும் இருந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற நந்தா மாலினிக்காக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நந்தா மாலினி தனது வாழ்க்கையை வெறும் பாடகியாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், 80 காலப்பகுதியில் மோசமான சமூக அரசியலில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இலங்கை சமூகத்தை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டார் என அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இரங்கல் செய்தி
தமது பாடும் திறமையை சமூக நீதி மற்றும் நியாயத்தின் குரலாக மாற்றி, புதியதொரு உலகம் குறித்து சிந்திக்க ஒரு தலைமுறைக்கு ஊக்கமளித்த, இலங்கையின் உண்மையான சத்தியக் குரல், தலைசிறந்த பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு இலங்கை சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறு வயது முதலே இந்நாட்டின் இசைத்துறையில் தனது தனித்துவத்தைப் பதித்துக் கொண்ட அவர், தனது வாழ்க்கையை வெறும் பாடகியாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், 80 காலப்பகுதியில் மோசமான சமூக அரசியலில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இலங்கை சமூகத்தை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டார்.
அதுமட்டுன்றி, இலங்கையின் முற்போக்கு மக்களின் இதயத்தில் ஆழமானதொரு இடத்தைப் பிடித்த அவர், தனது மரணம் வரை கொள்கை ரீதியான சத்தியக் குரலின் அடையாளத்தைப் பாதுகாத்தார்.
தனது வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் பொதுமக்களின் துக்கம், கண்ணீர் மற்றும் வியர்வையை நன்கு அறிந்திருந்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அடக்குமுறை நிறைந்த அரச பொறிமுறைக்கு எதிராக தைரியமாகப் போராடினார்.
அவரின் இனிய குரல், தங்களை வாட்டி வதைக்கும் ஒடுக்கப்படுதலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு போராட்டக் குரலாக இருந்தது. தாய்நாடு தள்ளப்பட்டிருந்த துயர நிலைக்கும், மக்கள் பட்ட வேதனைகளுக்கும் மனம் இரங்கிய நந்தா மாலினி, அடக்குமுறை அரசியல் அதிகாரத்திற்கு எதிராக எழுப்பிய ‘சத்தியத்தின் கீதம்’, வெறும் பாட்டாக அன்றி ஒரு கொடூரப் புயலாக மாறியது என்பதற்கு அனைவரும் சாட்சி பகர்வார்கள்.
தடைகள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மக்களின் இதயங்களுடன் இணைந்து துடித்த இனிமையான அதே வேளை கம்பீரமான அவரது குரல், மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலகட்டங்களில் மக்கள் தங்கள் துயரங்களைச் சகித்துக் கொள்ளவும், விடியல் உதயமாகும் வரை தளராது தாங்கிக் கொள்ளவும் மாபெரும் சக்தியாக விளங்கியது என்பதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
நந்தா மாலினி, தான் அணிந்திருந்த வெண்மை நிற ஆடையைப் போலவே, உறுதியான கொள்கையுடனும் குறுகிய நோக்கங்களால் கறைபடாமலும் இருந்தார். ஒரு கலைஞனின் வாழ்வு என்பது அவரின் மூச்சுக்காற்று வளிமண்டலத்துடன் கலக்கும் நாளன்று முடிவடைவதில்லை, மாறாக, அவர்களால் சமூகத்திற்குப் பரிசளிக்கப்பட்ட படைப்புகள் மனித இதயங்களிலிருந்து மறையும் நாளன்றே முடிவடைகிறது.
அந்த வகையில், நந்தா மாலினி எனும் ஒரு பெருங் காவியம் போன்ற ஒப்பற்ற பாடகியின் அழியாத பெயர், எமது மத்தியிலிருந்து ஒருபோதும் மறைந்து போகாது என்பதில் சந்தேகமில்லை.
கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்துள்ள குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அத்துடன் சக கலைஞர்கள் மற்றும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையின் சமூக, கலாசாரத்தில் மக்கள்சார் அடையாளத்தை ஆழமாகப் பதித்து, இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களை ஞானத்தால் தட்டியெழுப்பிய கலாநிதி நந்தா மாலினி அவர்களே, இந்நாட்டிலிருந்து விடைபெறும் உங்களின் எல்லையற்ற அர்ப்பணிப்பு இந்த பூமியில் என்றென்றும் நிலைத்திருக்கும்!


