தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
28 வயதுடைய இந்தச் சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
அதன் பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


