கோட்டாபயவினால் ஓரங்கட்டப்பட்ட முக்கியஸ்தர்! பதவியை துறந்த பின்னர் கிடைத்த பெரிய வாய்ப்பு
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.
அமெரிக்கத் தூதுவர் பதவி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.
அந்த ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.
இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.
தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


