Sunday, April 20, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்‘நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள், ரெயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரெயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? மத்திய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் மத்திய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட மத்திய அரசு, திட்ட விளம்பரங்களில் மத்திய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்கு சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் மத்திய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது. வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் மத்திய பட்ஜெட் என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?” இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments