Thursday, July 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் காணாமல்போனோரின் உறவுகள் மகஜர்

ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் காணாமல்போனோரின் உறவுகள் மகஜர்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதனை ஏற்றுக்கொண்டு, உரிய சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் நேற்றுப் புதன்கிழமை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர். இவர்களின் வருகையின்போது தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி உள்ளிட்ட இருவரை அழைத்து ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே யோகராசா கனகரஞ்சினி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரை செம்மணி மனிதப் புதைகுழி வாசலில் சந்தித்து, எங்களது உயிருக்கு மேலான கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்திருக்கின்றோம். அவர்கள் எங்களால் இயன்ற வரை உங்களுக்காக வேலை செய்வோம் என்று கூறியுள்ளனர்.

எங்களுக்கு எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். இலங்கையில் இனப்படுகொலைதான் நடந்தது என்பதனைச் சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாக சர்வதேச நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். உள்ளகப் பொறிமுறைகளையோ, விசாரணைகளையோ அல்லது காணாமல்போனோர் அலுவலகம் போன்ற இலங்கை அரசால் அமைக்கப்படும் அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கை அரசு எங்களுக்கு எப்போதுமே நீதியைத் தரப்போவதில்லை.

எத்தனையோ ஆணைக்குழுக்களையும் அரச பிரதிநிதிகளையும் சந்தித்தோம். எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். சர்வதேசம் எங்களுக்குச் சரியான நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில்தான் மனுக்களைக் கையளிக்கின்றோம். எங்களோடு போராடியவர்களில் 450 பேருக்கு மேல் இதுவரையில் மரணித்துவிட்டனர். அவர்களுக்கும் எங்களுடைய உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

கொடூர யுத்தமும் இன அழிப்பும் நடந்து பிற்பாடு கைளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சர்வதேசம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். கொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா. மன்றத்திலும் மனிதநேயத்தை நேசிக்கும் நாடுகளிலும் எமது பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச நீதிக்கான விசாரணையை மேற்கொள்ள உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த அறிக்கை வெறும் ஆவணம் அல்ல, எமது உயிரையே உங்களது கைகளில் ஒப்படைத்துள்ளோம் என்றே அவர்களிடம் தெரிவித்தோம்.” – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments