பால்வளத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.73.93 கோடி செலவில் 11 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.1.2025) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 58 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணைகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் என 10 முடிவுற்ற திட்டப் பணிகள், பால்வளத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை கிராமத்தில் 15 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைத்தும், நெல்லை மாவட்டம், கூடுதாழை கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தில் 21 கோடி ரூபாய் செலவிலும், சிப்பிக்குளத்தில் 7 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தூத்துக்குடியில் 5 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம், திருச்சிராப்பள்ளியில் 4 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள், திருப்பத்தூர் மாவட்டம், இலவம்பட்டியில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மீன்குஞ்சு பொரிப்பகம், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகம்;
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அரசு பழைய மீன் பண்ணையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுபிக்கப்பட்ட மீன்விதை பண்ணை, கன்னியாகுமரி மாவட்டம், சிற்றார் அணை-II மீன்வளர்ப்போர் மேம்பாட்டு நிறுவனத்தின் மீன் பண்ணையை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என 58 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலான 10 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
பால்வளத் துறை சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் 50 சதவீத நிதி உதவி மற்றும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 50 சதவீத சொந்த நிதியின் மூலம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரை கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 15 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்யவும், பால் உற்பத்தியை அதிகரித்திடவும் இப்புதிய கால்நடை தீவன தொழிற்சாலை வழிவகுக்கும்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள கூடுதாழை கிராமத்தில் உள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித்தல் மற்றும் அது சார்ந்த தொழில் ஆகும். இக்கிராமத்தில் சுமார் 247 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அப்பகுதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதியுதவிடன், கூடுதாழை கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய தூண்டில் வளைவு அமைப்பதின் மூலம், மீனவர்கள் படகுகளை இயக்குவது மிகவும் சுலபமாகும், மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும், அதிகப்படியான படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் வழிவகை ஏற்படுவதோடு, பிடிக்கப்படும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும் இயலும்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, முதன்மைச் செயலாளர்/ மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் சு.வினீத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.