கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழப்பங்களுக்கு மத்தியில் பாதியிலேயே முடிவுக்கு வந்தது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று காலை 9 மணிக்குக் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டத்தின் போது, திருவையாறு பகுதியில் அமைச்சர் லால் காந்தவால் மேற்கொள்ளப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் இந்த விடயத்தில் உடந்தையாக செயற்படுவதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
தொடர்ந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தவிசாளர்களுக்கு இடையிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதுடன், பின்னர் அரச திணைக்கள அதிகாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.


