சுற்றுலா இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான, முத்தரப்பு ஒருநாள் தொடரின் செம்பியன் தொடரை இந்திய ஏ அணி வெற்றிக் கொண்டது.
தம்புள்ளை மைதானத்தில் இன்று இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 377 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்சி ஆரம்ப முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கமைய, 5 ஆறு ஓட்டங்களும் 5 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக வெறும் 11 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் முதல்தர அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரராக சாதனை படைத்தார்.
அதேநேரம் இந்தப் போட்டியில் 8 ஆறு ஓட்டங்களும் 10 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக வெறும் 29 ஓட்டங்களில் 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, 378 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47 .1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 311 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன்படி, ஒரு நாள் முத்தரப்பு தொடரின் செம்பியன் பட்டத்தை இந்திய ஏ அணி தம்வசப்படுத்தியது.
இன்றைய போட்டியின் சிறப்பாட்ட வீரராக வைபவ் சூரியவன்சி தெரிவு செய்யப்பட்டார்.


