2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
* தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின்படி, உயர் தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும்.
* 2026 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும்.
* 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இப்பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும்.
* அதற்கமைய, 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய காலம் கிடைத்துள்ளமையினால், குறித்த பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை எழவில்லை.


