இந்திய A, ஆப்கானிஸ்தான் A அணிகளுடன் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை A அணி இலக்கு வைப்பதாக கூறப்படும் கருத்தை இலங்கை A அணித் தலைவர் சஹான் ஆராச்சிகே நிராகரித்துள்ளார்.
கடந்த போட்டியில் இலங்கை A வீரர் விஷேன் ஹாலம்பகே மற்றும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடையே ஏற்பட்ட சர்ச்சையான மோதல் குறித்து அவர் பேசினார். அந்த சம்பவம் கடும் அழுத்தம் நிறைந்த போட்டியில் ஏற்பட்ட சாதாரண உணர்ச்சி வெளிப்பாடே எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய A மற்றும் இலங்கை A அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மீண்டும் மோத உள்ளன. முன்னதாக குழு சுற்றில் நடைபெற்ற ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.
இறுதி மூன்று பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யவன்ஷியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. அப்போது இலங்கை வீரர்கள் அவரை நோக்கி சில வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் சூர்யவன்ஷி விலகிச் சென்றாலும், அவரது சக துடுப்பாட்ட வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜ் இலங்கை அணியினரை எதிர்கொண்டபோது தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இளம் வீரர் ஹாலம்பகேவை தள்ளியதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த சம்பவத்துக்காக இலங்கை கிரிக்கெட் (SLC) ஹாலம்பகேவுக்கு அபராதம் விதித்தது. மேலும் அணி நிர்வாகம் சூர்யவன்ஷியிடம் மன்னிப்பு கோரலாம் என செய்திகள் வெளியாகினாலும் அது இறுதியில் நடைபெறவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்த விவகாரத்தில் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை.
“எங்கள் வீரர்கள் யாரையும் இலக்காக வைத்து செயல்படவில்லை. அவர்கள் வெறும் விளையாட்டை அனுபவிக்கிறார்கள்,” என ஆராச்சிகே கூறினார். “சூப்பர் ஓவர் போன்ற நெருக்கமான போட்டிகளில் உணர்ச்சிகள் வெளிப்படுவது இயல்பு,” என்றும் அவர் Sportstar-க்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது அணியின் தயார்ப்படுத்தல் நிலை குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
“துடுப்பாட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. பந்துவீச்சிலும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்,” எனவும் அவர் கூறினார்.


