Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்!

1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்!

இந்தியாவின் கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 91 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. குழந்தையை கொன்றதாக தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகியோரை நெடுமங்காடு பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தை சாப்பிடும்போது உணவு தொண்டையில் சிக்கி, மயங்கி விட்டதாக சொல்லி குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் அகிலா.

குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

வைத்திய அறிக்கையின்படி, குழந்தையின் மரணம் தற்செயலானது அல்ல என்பதும், அது திட்டமிட்ட படுகொலை என்பதும் உறுதியானது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் மற்றும் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

குழந்தையின் இரண்டு கைகளும் ஏற்கனவே உடைந்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் சிகரெட்டால் சுடப்பட்ட தீக்காயங்களும், பிறப்புறுப்பில் கடுமையான காயங்களும் இருந்ததும் வைத்திய பரிசோதனையில் தெரியவந்தன. குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையின் தலையை சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார் அஷ்கர்.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட மூளை மற்றும் உட்புற உறுப்புகளின் ரத்தப்போக்கு காரணமாகவே குழந்தை இறந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

அகிலாவின் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அஷ்கருடன் இணைந்து அகிலா கறிக்குழி என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அஷ்கருக்கும் ஏற்கனவே திருமணமாகி அமீனா என்ற முதல் மனைவி உள்ளார். அவரை வரதட்சணை கேட்டு தாக்கியதில், அவர் கடந்த ஓராண்டாக கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது காதலர் அஷ்கரால், குழந்தை சித்திரவதை செய்யப்படுவது தாய் அகிலாவுக்குத் தெரிந்தும், அவர் அதைத் தடுக்காமலும், பொலிஸாருக்கு தெரிவிக்காமலும் இருந்துள்ளார்.

மேலும் குற்றத்தை மறைக்க வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி, குழந்தையின் துணிகளையும் அஷ்கருடன் சேர்ந்து எரித்து இருக்கிறார் அகிலா. குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் அழிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அஷ்கரை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைத்து சென்றபோது, ஆத்திரமடைந்த உள்ளூர் பொதுமக்கள் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி அஷ்கரை சரமாரியாக தாக்கினர்.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அஷ்கரின் காரையும் பொதுமக்கள் அடித்து உடைத்தனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பான சூழநிலை ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கேரள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா உறுதியளித்துள்ளார். ஒன்றரை வயது குழந்தையை தாயும், அவரது காதலரும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments