வொஷிங்டனில் உள்ள ‘வொஷிங்டன் ஹில்டன்’ ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்படும் பலத்த சத்தங்கள் கேட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (26) மாலை இடம்பெற்ற இந்த அமைதியற்ற சூழல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர்.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியா ட்ரம்பையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அவர் அமர்ந்திருந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.
இந்தச் சத்தம் எதனால் ஏற்பட்டது அல்லது எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.


