Sunday, April 20, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை; எனக்கு வீடு வேண்டாம் - ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை; எனக்கு வீடு வேண்டாம் – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் ஊடாக இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது. மக்களின் ஆட்சி தோற்றம் பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்றோம். குறுகிய அமைச்சரவையை ஸ்தாபித்து நாட்டை நிர்வகித்தோம். மக்களின் அபிலாசைக்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினோம்.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து மக்களை சந்திக்கவே எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும் அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததால் அதற்கு முக்கியத்துவம் வழங்கினேன்.அரசாங்கத்தின் இருப்பு மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வீழ்த்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தை அமைப்பதற்கு பல சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் போன்ற சூழ்ச்சிகள் .அச்சமடைய வேண்டாம் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில ஊடகங்கள் அரசாங்கங்கள் தோற்றம் பெறுவதற்கு செயற்பட்டுள்ளது. சூழ்ச்சிகள் ஏதும் இல்லாமல், ஊடகங்கள் இல்லாமல், அரச பலம் இல்லாமல் இலங்கையில் முதன் முறையாக எமது அரசாங்கம் தோற்றம் பெற்றது. எமது அரசாங்கத்தின் பின்னணியில் மக்களே உள்ளார்கள். ஆகவே இதன் பெருமையை என்றும் மக்களுக்கே வழங்குவோம். ஆகவே இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது ஆட்சியை தடுப்பதற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து குற்றச்சாட்டுக்களையும் புறக்கணித்து மக்கள் எம்மை தெரிவு செய்தார்கள்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறந்த மாற்றத்தை கருத்திற் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அளப்பரிய பொறுப்பு எமக்கு உண்டு. இந்த இரண்டு மாதங்களில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.சர்வதேச உறவுகளை பலப்படுத்தியுள்ளோம். அரச நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளோம். ஆகவே இரண்டு மாதங்களில் சிறந்த மாற்றத்துக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி 21 அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபித்தேன். இராஜாங்க அமைச்சு என்ற இணைப்பை உருவாக்கவில்லை. களுத்துறை மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் 8 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள்.

இருப்பினும் ஒருவருக்கு மாத்திரமே அமைச்சரவை அமைச்சினை வழங்கினேன். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை மற்றும் சலுகைகளை வழங்கி நாட்டை முன்னேற்ற முடியாது. பொறுப்புக்களை மாத்திரமே சலுகைகளற்ற வகையில் பகிர்ந்தளித்தேன். எவரையும் திருப்திப்படுத்துவதற்காக அமைச்சுக்களை வழங்கவில்லை.

குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் கடந்த காலங்களில் அமைச்சரவை அமைச்சுக்கள் பகிரப்பட்டன. மூத்த சகோதரர் பிரதமர், சிறிய சகோதரர் நிதியமைச்சர், குடும்ப மகன் விவசாய அமைச்சர். இந்த கலாச்சாரத்துக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை. ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. இந்த கலாச்சாரத்தை நாங்கள் பின்பற்றவில்லை.

அரசாங்கம் என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளை பகிர்தளிப்பதல்ல, மக்களுக்கு சேவையாற்றுவது என்பதை எடுத்துரைத்துள்ளேன். அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளேன். அமைச்சர்களின் பின்னால் பொலிஸ் வாகனங்கள் ஏதும் தற்போது செல்வதில்லை. ஆளும் தரப்பினருக்கும் எந்த சலுகையும் இல்லை, எதிர் தரப்பினருக்கும் எந்த சலுகைகளும் வழங்குவதில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு மாதம் 70 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டது. அனைத்தையும் திருத்தியமைத்தேன். 60 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளார்கள். மேலும் திணறினால் அறுபதையும் குறைப்பேன். தேவையாயின் 60 பேரை வைத்துக் கொள்ளுங்கள், தேவையில்லையாயின் திருப்பி அனுப்புங்கள்.

எந்த அமைச்சருக்கும் அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் வழங்கவில்லை. அனைத்து அரச இல்லங்களும் பொதுநிர்வாக அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தவிர்த்து ஏனைய அரச இல்லங்கள் அனைத்தையும் என்னசெய்வது என்பது தொடர்பில் யோசனை முன்வைக்கும் பொறுப்பை விசேட குழுவுக்கு வழங்கியுள்ளேன். இந்த மாற்றம் நாட்டுக்கு அவசியம்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டை அரச மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகளை அனுப்பி வைத்து மதிப்பீடு செய்தேன்.காணியை மதிப்பிடவில்லை. வீடு மாத்திரமே மதிப்பிடப்பட்டது.பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டின் மதிப்பீட்டுக்கு அமைய மாதம் 46 இலட்சம் ரூபா பெறுமதியானது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை சட்டத்தில் ஒன்று வீடு உரித்தாக வேண்டும் அல்லது சம்பளத்தில் மூன்றில் ஒன்று உரித்தாக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நாங்கள் வீட்டை பொறுப்பேற்போம். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கான 30 ஆயிரத்தை வழங்குவோம். இல்லாவிடின் மிகுதி கட்டணத்தை வழங்கி மாத வாடகை அடிப்படையில் அரச இல்லத்தில் இருக்க முடியும்.வாடகை செலுத்தாவிடின் வெளியில் செல்ல வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வீட்டை மதிப்பிட சென்றார்கள். அவர் இரண்டு வாரங்கள் லண்டனில் இருப்பதாக குறிப்பிட்டார்.தற்போது நாட்டுக்கு வந்துள்ளார். ஆகவே தற்போது அரச மதிப்பீட்டு திணைக்களத்தை அனுப்பி வைப்பேன். இவர்கள் எவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்தார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments