மத்திய கிழக்கில் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை (10) சரிந்தன.
இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நீண்டகால இடையூறுகள் குறித்த கவலைகளைத் தணித்தது.
0018 GMT நிலவரப்படி பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $6.51 அல்லது 6.6% சரிந்து 92.45 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் $6.12 அல்லது 6.5% குறைந்து 88.65 அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.திங்களன்று எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 ஐத் தாண்டி உயர்ந்து.
பிரெண்ட் மசகு எண்ணெய் 119.50 அமெரிக்க டொலர்ளாகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 119.48 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.இது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு பின்னர் எண்ணெய் விலை உயர்வடைந்த சர்ப்பமாகும்.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது சவுதி அரேபியா மற்றும் பிற உற்பத்தியாளர்களின் விநியோகக் குறைப்பு உலகளாவிய விநியோகங்களில் பெரும் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தைத் தூண்டியது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ட்ரம்புடன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஈரான் போருக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, நீண்டகால விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்ததாக கிரெம்ளின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
திங்களன்று சிபிஎஸ் செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போர் மிகவும் முழுமையானது என்று தான் கருதுவதாகவும், போர் தொடர்பில் முன்னர் கணக்கிடப்பட்ட நான்கு முதல் ஐந்து வார காலக்கெடுவை விட நாங்கள் அதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), போரின் முடிவை தீர்மானிப்போம் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் ஒரு லிட்டர் எண்ணெயைக் கூட பிராந்தியத்திலிருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது என்றும் கூறியதாக அதன் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி செவ்வாயன்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும், அந்தக் கருத்துக்கள் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை.
ஈரான் மோதலுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விருப்பங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக ரஷ்யா மீதான எண்ணெய்த் தடைகளைத் தளர்த்துவது மற்றும் அவசரகால மசகு எண்ணெய் இருப்புக்களை வெளியிடுவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதால், விலைகளும் அழுத்தத்தில் இருந்தன என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் இந்தப் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தை பாதித்ததால், வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.
வார இறுதியில், ஈராக் அதன் முக்கிய தெற்கு எண்ணெய் நிலையங்களில் உற்பத்தியை 70% குறைத்து ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்தது.
அதே நேரத்தில் குவைத் பெட்ரோலியக் கழகமும் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியது. இந்த வெட்டுக்களுடன் சேர்த்து, சவுதி அரேபியா இப்போது உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளது என்று திங்களன்று வட்டாரங்கள் தெரிவித்தன.
உலக எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதற்கு பதிலளிக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தத் தயாராக இருப்பதாக ஜி7 நாடுகள் திங்களன்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


