ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்றாலும் களத்திற்கு வெளியே திட்டங்களை துல்லியமாக தீட்டுவது அவசியம் என இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். அதை செய்யவில்லை எனில் இந்திய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போல கம்பீர் பொறுமையானவர் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்தியாவில் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். பயிற்சியாளர்கள் களத்தில் இருக்க மாட்டார்கள். கேப்டன் மற்றும் வீரர்கள்தான் களத்தில் விளையாடுவார்கள். புதிய பயிற்சியாளர் அவர்களுக்கு தகுந்தாற்போல் தன்னுடைய சொந்த வழியில் திட்டங்களை கொண்டு வந்து அணியை சிறந்த வழியில் நடத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் தங்களுடைய கைகளை உயர்த்துவார்கள். கம்பீர் கொஞ்சம் சுபாவம் உள்ள நபர். அவர் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரை விட வித்தியாசமானவர். ஒவ்வொரு பயிற்சியாளர்களும் தங்களுடைய சொந்த வழியில் சிந்திக்கக் கூடியவர்கள். எனவே கம்பீர் தனது வழியில் நல்லது செய்வார் என்று நம்புகிறேன்” எனகூறினார்.