வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குப் பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்குத் தோள்கொடுத்து உதவ வேண்டும் எனவும், இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே எதிர்காலத்தில் எமது மாகாணம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள தொழில்நுட்ப பீடத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘நடப்பு ஆண்டில் வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு நிதி மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன. இந்த நிதியினூடான அபிவிருத்தித் திட்டங்கள் தரமானதாகவும், உரிய காலவரையறைக்குள்ளும் நிறைவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், எமக்கு ஆளணி வளம், குறிப்பாகத் தொழில்நுட்ப ஆளணி வளத்தில் மிகப் பெரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே, இவ்வாறான சவால்களை வெற்றிகொள்ளப் பல்கலைக்கழக சமூகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியும்.
இந்த ஆண்டு மாத்திரமன்றி, எதிர்காலத்திலும் இத்தகைய விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வலுவானதொரு பொறிமுறையை நாம் உருவாக்க வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்ப பீடம் மற்றும் பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்களையும், இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்களையும் பயிற்சி அடிப்படையில் நாம் எமது செயற்றிட்டங்களில் இணைத்துக்கொள்ள முடியும்.
எம்மிடமுள்ள மனித வளங்களை உச்சளவில் பயன்படுத்தி மாகாணத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்’ என வலியுறுத்தினார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர் கருத்துத் தெரிவிக்கையில், மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பல்கலைக்கழகம் எவ்வாறு காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டுப் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், பயன்படுத்தப்படாதுள்ள இயந்திரங்கள் மற்றும் உற்பத்தித் திறன் குறைந்த தொழிற்சாலைகளை அவற்றின் ஆரம்ப இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் எவ்வாறு செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்கலாம் என்பது குறித்தும், அதற்குப் பல்கலைக்கழகம் எவ்வகையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியும் என்பது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக சமூகம் எந்தெந்த விடயங்களில் தமக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவ முடியும் என்பது தொடர்பில் வடக்கு மாகாணக் கைத்தொழில் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக விரிவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அரசாங்கத்தின் எண்ணியமயமாக்கல் கொள்கைக்கு அமைவாகத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செயற்றிட்டங்களில் பல்கலைக்கழகம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், மாகாணத்துக்குப் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் வரும்போது அவற்றின் சாதக, பாதகங்கள் குறித்துப் பகுப்பாய்வு செய்வதற்கும் பல்கலைக்கழகம் பெரிதும் உதவ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், ஏனைய சில மாகாணங்களில் மாகாண நிர்வாகத்துடன் இணைந்து இவ்வாறானதொரு சிறப்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமையும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரிவான திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், மாகாணக் கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி ரி.கேதீசன், பொறியியல் பீடாதிபதி கலாநிதி கணேஸ்வரன் அனந்தராஜ், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



