கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் வேலை தேடுபவர்கள் தற்போது ஒரு இருண்ட காலத்தைச் சந்தித்து வருகின்றனர்.
பல ஆண்டுகால அனுபவம் கொண்ட நிபுணர்கள் முதல், இப்போதுதான் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் வரை அனைவரும் “இந்த அமைப்பு எங்களைத் தோல்வியடையச் செய்துவிட்டது” என்று ஆதங்கப்படுகின்றனர்.
மிகையான போட்டி, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வடிகட்டல் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை இணைந்து டொராண்டோவை வேலை தேடுபவர்களின் இடுகாடாக மாற்றியுள்ளன.
30 ஆண்டுகால அனுபவம் இருந்தும் 2 ஆண்டுகால காத்திருப்பு: எட் வைட்டின் கதை
டொராண்டோவைச் சேர்ந்த 60 வயதான எட் வைட் (Ed Wight), விருந்தோம்பல் மென்பொருள் துறையில் (Hospitality software) சுமார் 18 ஆண்டுகள் மூத்த ஆதரவு மேலாளராகப் (Senior Support Manager) பணியாற்றியவர்.
2023 நவம்பரில் ஏற்பட்ட ஆட்குறைப்பு (Layoffs) காரணமாக அவர் தனது வேலையை இழந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர் ஒவ்வொரு நாளும் ஒரு விண்ணப்பம் வீதம் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்.
ஆனால், அவருக்குக் கிடைத்தது வெறும் இரண்டு நேர்காணல்கள் மட்டுமே.
“நான் 30 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய ஒரு வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப் பார்க்கிறேன்,” என்கிறார் அவர்.
தற்போது தனது துறை சார்ந்த வேலைகளைத் தவிர்த்து, ஓட்டுநர் பணி, மதுபானக் கடைகள் (LCBO) அல்லது பருவகாலப் பணிகள் என எதுவாக இருந்தாலும் செய்யத் தயாராக இருக்கிறார்.
“மணிக்கு 25 டாலர் ஊதியம் கிடைத்தால் போதும், வீட்டை விட்டு வெளியே சென்று உழைக்க வேண்டும். எனது துறை குறித்து எனக்கு இப்போது கவலையில்லை” என அவர் தனது விரக்தியை வெளிப்படுத்துகிறார்.
முதுமை ஒரு தடையாக இருக்கிறதா?
வேலை தேடும் வயதானவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் போதுமான விவாதங்கள் நடப்பதில்லை என்று வைட் கூறுகிறார்.
தனது வயதுதான் தன்னை வேலைக்குத் தேர்ந்தெடுக்காததற்குக் காரணமாக இருக்குமோ என்று அவர் அஞ்சுகிறார்.
“தங்களை விட அதிக அனுபவம் கொண்ட ஒருவரை வேலைக்கு அமர்த்தப் பலர் அஞ்சுகிறார்கள். அந்த அனுபவத்தால் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என நினைக்கிறார்கள்.
ஆனால், ஒரு அனுபவசாலியால் நிறுவனத்திற்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள்,” என்கிறார் வைட்.
ஒருவேளை விரைவில் வேலை கிடைக்காவிட்டால், அவர் கட்டாய ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகலாம்.
மாணவர்கள் சந்திக்கும் கடும் போட்டி மற்றும் AI சவால்கள்
மறுபுறம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. டொராண்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக (TMU) மாணவி கிரேஸ் பாஷல் கூறுகையில், “ஆரம்ப நிலை வேலைகளுக்குக் (Entry-level roles) கூட ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர்.
குறைந்தபட்ச ஊதியத்திற்கு (Minimum wage) ஒரு வேலை பெறுவது கூட இப்போது இமாலய சாதனையாகிவிட்டது,” என்கிறார்.
அவர் சந்தித்த மற்றொரு பெரிய பிரச்சனை செயற்கை நுண்ணறிவு வடிகட்டல் (AI screening).
“ஒரு மனிதனிடம் பேசுவதற்குப் பதிலாக, ரோபோவிடம் பேச வேண்டியுள்ளது. இது ஒருவித மனச்சோர்வைத் தருகிறது. நிறுவனத்தைத் தொடர்புகொள்ள எவ்வித நேரடித் தொலைபேசி எண்களோ அல்லது மின்னஞ்சலோ கிடையாது.
இந்த முறையானது வேலை தேடுபவர்களுக்கு உதவத் தவறிவிட்டது,” என்கிறார் பாஷல். மற்றொரு மாணவியான மன்ரூப் அவுலக், 99 சதவீத விண்ணப்பங்களுக்கு எவ்விதப் பதிலும் வருவதில்லை எனத் தனது Tedious (சோர்வான) அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தேசிய சராசரியை விடவும் அதிகமான டொராண்டோ வேலையில்லாத் திண்டாட்டம்
கனடா புள்ளியியல் துறை (Statistics Canada) தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்டம் 6.5 சதவீதமாக உள்ளது.
ஆனால், டொராண்டோவில் இது சுமார் 8 சதவீதமாக இருப்பது கவலையளிக்கிறது. ‘ராபர்ட் ஹாஃப்’ (Robert Half) வேலைவாய்ப்பு முகமையின் தொழில்நுட்பத் துறை நிபுணர் மீனா துபே இதற்கான காரணங்களை விளக்குகிறார்.
“இளம் தலைமுறையினர் அதிக அளவில் டொராண்டோவிற்கு வருவதால் போட்டி அதிகரித்துள்ளது. மேலும், 2025-ன் நிச்சயமற்ற சந்தை நிலை காரணமாகப் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதைக் குறைத்தன,” என்கிறார் அவர்.
இருப்பினும், தற்போது நிறுவனங்கள் இந்தச் சூழலுக்குப் பழகிவிட்டதால், மெதுவாக மீண்டும் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன என்பது ஒரு சிறிய நம்பிக்கையைத் தருகிறது.


