இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ், ‘வாழ்வுரிமை’ என்பதன் ஒரு அங்கமாக மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Health) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாகும்.
இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பருவ வயது மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதை உறுதி செய்யுமாறு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்தத் தீர்ப்பு வெறும் சட்ட அமைப்பிற்கானது மட்டுமல்ல, உதவி கேட்கத் தயங்கும் மாணவிகளுக்காகவும், வள ஆதாரங்கள் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்காகவும் வழங்கப்படுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் 5 முக்கிய வழிகாட்டுதல்கள்
பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘தேசிய மாதவிடாய் சுகாதாரக் கொள்கை’ (Menstrual Hygiene Policy) நாடு முழுவதும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
1. பாலின அடிப்படையிலான கழிவறைகள் (Gender-Segregated Toilets)
அரசு மற்றும் தனியார் என அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கென தனியான, செயல்படக்கூடிய கழிவறைகள் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இதில் முறையான தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
2. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதி
புதிதாகக் கட்டப்படும் அல்லது ஏற்கனவே உள்ள கழிவறைகள் மாற்றுத்திறனாளி மாணவிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும், அவர்களின் தனிமனித ரகசியத்தைப் (Privacy) பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.
3. சோப்பு மற்றும் தண்ணீர் வசதி
அனைத்து பள்ளி கழிவறைகளிலும் கை கழுவும் வசதிகள், போதிய அளவு சோப்பு மற்றும் 24 மணிநேரமும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. இலவச சானிட்டரி நாப்கின்கள் (Free Sanitary Napkins)
ASTM D-6954 தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட ‘Oxo-biodegradable’ (மண்ணில் மட்கக்கூடிய) சானிட்டரி நாப்கின்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளில் இலவசமாக வழங்க வேண்டும்.
இவை கழிவறை வளாகத்திலேயே ‘Vending Machines’ மூலமாகவோ அல்லது எளிதில் அணுகக்கூடிய இடங்களிலோ வைக்கப்பட வேண்டும்.
5. அவசரக்கால மாதவிடாய் மேலாண்மை அறைகள் (MHM Corners)
ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாதவிடாய் சுகாதார மேலாண்மை அறைகள்’ அமைக்கப்பட வேண்டும்.
அங்கு அவசரத் தேவைக்காக கூடுதல் உள்ளாடைகள், பள்ளிச் சீருடைகள் மற்றும் நாப்கின்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கழிவு மேலாண்மை குறித்த உத்தரவுகள்
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அகற்றுவது குறித்து நீதிமன்றம் தெளிவான விதிகளை வகுத்துள்ளது:
-
சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பான முறையில் நாப்கின்களை அப்புறப்படுத்தும் வசதி பள்ளிகளில் இருக்க வேண்டும்.
-
ஒவ்வொரு கழிவறை யூனிட்டிலும் மூடப்பட்ட குப்பைத் தொட்டிகள் (Covered Wastebins) வைக்கப்பட்டு, அவை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
நீதிமன்றம் எழுப்பிய 4 முக்கிய அரசியலமைப்பு கேள்விகள்
இந்த வழக்கின் ஆழத்தை விளக்க, நீதிபதிகள் நான்கு முக்கிய கேள்விகளுக்குப் பதிலளித்தனர்:
கேள்வி 1: சமத்துவ உரிமை (பிரிவு 14) மீறப்படுகிறதா? பதில்: ஆம். வசதியுள்ள மாணவிகளுடனும், மாணவர்களுடனும் ஒப்பிடும்போது, மாதவிடாய் உபகரணங்கள் வாங்க முடியாத மாணவிகள் இரட்டைப் பாதிப்பைச் சந்திக்கின்றனர். இது ஒரு உயிரியல் யதார்த்தத்தை (Biological Reality) சமூகப் புறக்கணிப்பாக மாற்றுகிறது.
கேள்வி 2: பிரிவு 21-ன் கீழ் கண்ணியமான மாதவிடாய் சுகாதாரம் வருமா? பதில்: நிச்சயமாக. ஒரு மாணவி போதிய வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு வராமல் இருப்பதோ (Absenteeism) அல்லது சுகாதாரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதோ அவரது உடல் ரீதியான தன்னாதிக்கத்தை (Bodily Autonomy) மீறுவதாகும். இது வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகும்.
கேள்வி 3: வாய்ப்புகளில் சமத்துவம் பாதிக்கப்படுகிறதா? பதில்: பள்ளியில் முறையான கழிவறைகள் இல்லையெனில், மாணவிகள் கறை படிந்துவிடுமோ என்ற அச்சத்திலும் சங்கடத்திலும் வாழ்கின்றனர். இது அவர்கள் கல்வியில் முழுமையாகப் பங்கேற்பதைத் தடுத்து, எதிர்கால வாய்ப்புகளைப் பறிக்கிறது.
கேள்வி 4: கல்வி உரிமை (பிரிவு 21A) இதனுடன் தொடர்புடையதா? பதில்: கல்வி என்பது ஒரு ‘Multiplier Right’. அதாவது மற்ற உரிமைகளை அடைய கல்வி அவசியம். இலவசக் கல்வி என்பது வெறும் கட்டண விலக்கு மட்டுமல்ல, ஒரு குழந்தை தடையின்றி கல்வி கற்கத் தேவையான அனைத்து வசதிகளையும் (சானிட்டரி நாப்கின்கள் உட்பட) வழங்குவதையும் குறிக்கும்.
வழக்கின் பின்னணி
இந்த வழக்கு 2022-ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கப்பட்டது.
2023-ல் மத்திய அரசுக்கு தேசிய கொள்கை வகுக்க உத்தரவிடப்பட்டது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இதற்கான செயல்பாட்டுத் திட்டத்தை மத்திய அமைச்சகம் ஒருங்கிணைக்கும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இந்தத் தீர்ப்பை அமல்படுத்தத் தவறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


