Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பயணிகளின் பாதுகாப்பில் சமரசமில்லை: பேருந்து ஓட்டும்போது அலைபேசி பேசிய சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம்.

பயணிகளின் பாதுகாப்பில் சமரசமில்லை: பேருந்து ஓட்டும்போது அலைபேசி பேசிய சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம்.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தின்போது, அலைபேசியில் உரையாடிக்கொண்டே பேருந்தைச் செலுத்திய சாரதி ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பொதுப் போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையும் அதிரடிப் பணிநீக்கமும்

வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 25, 2026 அன்று காலை 9:45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றின் சாரதி,

தனங்கிளப்பு வரையிலான நீண்ட தூரப் பயணத்தின்போது தொடர்ந்து கைப்பேசியில் (Mobile Phone) பேசியவாறே வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

வீதிப் பாதுகாப்பு விதிகளைத் துச்சமாக மதித்துச் செயல்பட்ட இந்தச் சாரதியின் செயல் குறித்து, பேருந்துக்குள் இருந்த ஒரு பயணி காணொளி (Video) ஆதாரத்துடன் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்திய அதிகாரிகள், மறு அறிவித்தல் வரும் வரை குறித்த சாரதியைச் சேவையிலிருந்து இடைநிறுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்துக்கு எச்சரிக்கை

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் நலன் சார்ந்த மற்றொரு புகாரிலும் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 23, 2026 அன்று மதியம் 1:40 மணியளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து குறித்துப் பாடசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது.

வெயிலில் காத்திருந்த மாணவர்களை அலட்சியப்படுத்திச் சென்ற அந்தப் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் (Conductor) ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்த அதிகார சபை, அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாரதிகள் அல்லது நடத்துனர்களின் விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் முறையான ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில்,

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று அவர் தனது அறிக்கையில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments