ஜா எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒத கல பகுதியில், சட்ட விரோத மதுபானம் மற்றும் கோடா வைத்திருந்த ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீர்கொழும்பு, கொட்டுகொட, திஸ்ஸமஹாராமய, மொனராகலை, கம்பஹா மற்றும் புபுதுகம ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 30 தொடக்கம் 47 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 607 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 138,42 லீற்றர் கோடா (60 பீப்பாய்கள்) மற்றும் வடிகட்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தேகநபர்கள் ஜா எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒத கல பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை வடிகட்டி ஜா எல, கந்தானை, ராகம, கிரிபத்கொடை, கடவத்தை, பேலியகொடை மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளுக்கு மிக நுணுக்கமாக விநியோகித்துள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.