Friday, January 10, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்சட்டசபையில் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்

சட்டசபையில் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விபரம் பின்வருமாறு;

எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா?

சபாநாயகர்: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை.

எடப்பாடி பழனிசாமி: கவர்னர் உரையை கவர்னர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே கவர்னர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் கவர்னரை கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை.

முதல்-அமைச்சர்: எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை கவர்னர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது

முதல்-அமைச்சர்: எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினீர்கள்.

முதல்-அமைச்சர்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார். நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.

எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்கள் இருந்த ஆட்சிதான்

முதல்-அமைச்சர்: தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை. வரவும் விடவில்லை.

எடப்பாடி பழனிசாமி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துபோய்விட்டது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பாஜக அமைச்சரை அழைத்து வெளியிட்டீர்கள்.

முதல்-அமைச்சர்: மத்திய மந்திரியாக உள்ளவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு உள்ளது?

எடப்பாடி பழனிசாமி: நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்..

முதல்-அமைச்சர்: நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்…

அமைச்சர் துரை முருகன்: அவர்கள் (அதிமுகவினர்) வெளிநடப்பு செய்யப்போகிறார்கள். அதற்காக தயாராக வந்துள்ளனர்.

இவ்வாறு அந்த விவாதம் இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments