Thursday, January 9, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான மாநில மன்றம் அமைப்பு

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான மாநில மன்றம் அமைப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செவ்வனே சென்றடைவதை உறுதி செய்யும்பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டம், 2024 விதி 3(2) –ன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாநிலங்களவை / சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில மன்றம் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

இம்மன்றம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயற்பணிகளை மேற்கொள்ளும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டம், 2024 சட்ட விதி 8(1)-இன் கீழ் மாவட்டக் கண்காணிப்புக் குழுவினை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் மாவட்ட கண்காணிப்புக் குழுவானது மாவட்டத்தில் மேம்பாட்டு செயல்திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து முகமைத் துறையான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்கும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் 20.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் IV-A–இல் உள்ள பிரிவுக் கூறு 15A(11)–இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments